இதோ எனது முதல் தமிழ் பதிவு, விவசாயத்தை பற்றி

இதோ எனது முதல் தமிழ் பதிவு, அதுவும் என் பாட்டன், அப்பன் பெருமையாக கருதிய விவசாயத்தை பற்றி. பல ஏக்கர்கள் கோணிகளாக சுருங்கியது.

சற்றுமுன் சகோதரி ஒருவர் இந்த படத்தை சமூக ஊடகம் ஒன்றில் பதிவு செய்திருந்தார். சகோதரி தங்களின் முயற்சிக்கு எனது பாராட்டுக்கள். ஆனால் மனதில் ஏதோ ஒரு மூலையில் சிறிய நெருடல்.

Banana Plantation

வாழை உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு மிகவும் பெரியது. இந்தியாவில் வாழை அதிகம் பயிரிடப்படும் மாவட்டங்களில் தமிழகமும் ஒன்று. வாழை உற்பத்தியில் தேனி, திருச்சி, கரூர், ஈரோடு, தூத்துக்குடி, கோவை, கன்னியாகுமாரி, தஞ்சாவூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் பங்கு அதிகம்.

அப்படி கன்றுகள் நட்டு, கிடங்கு வெட்டி,  அடிஉரம் இட்டு பலநூறு ஏக்கர்களில் பயிரிடப்பட்ட வாழை இன்று ஒரு கோணிப்பையில் குலைதள்ளியுள்ளது.

சிறுவயதில் அப்பாவுடன் காலையில் தூக்குசட்டியில் சோற்றை எடுத்துக்கொண்டு, மிதிவண்டியில் சிறுகாம்பூர் வாழைக்கு சென்ற நினைவுகள் என்றும் பசுமையானவை. வளரும் பிள்ளை என்பதால் முதல் வாழை கன்றை என்னிடம் தந்து நடசொல்வார் எனது தாத்தா பழனியாண்டி. மதிய நேரங்களில் நண்டு பிடிப்பதும், வாய்க்காலில் மீன் பிடிப்பதைவிட வேறு என்ன சாகச விளையாட்டு வேண்டும் அந்த வயதில்.

பசி வரும்போது எல்லாம் ஒரு வாழைப்பூவை வெட்டி, அதை ஆய்ந்து அதன் நுனியில் உள்ள மொட்டை சாப்பிட்டால் போதும், பசி பறந்துபோகும். விவசாய குடும்பத்திலிருந்து வந்தவர்களுக்கு தெரியும் வாழை ஒரு இக்கட்டான பயிர். ஒரு மணி நேரம் காற்று அடித்தல் போதும், ஒரு வருட உழைப்பும் வீண்.

வாழை பயிரிடும் அத்தனை வீட்டிலும், தனியாக ஒரு சட்டை மற்றும் கைலி இருக்கும், அது எவ்வளவு சோப்பு  போட்டாலும் வெளுக்காது. கன்று கட்டுதல், தேவையில்லாத கன்றுகளை எடுத்தல், சவுக்கு நடுதல் இவை அனைத்தும் முக்கியமான செயல்கள் வாழை சாகுபடியில்.

அப்படி இருந்த விவசாய நிலங்கள் அனைத்தும் இன்று விளைநிலங்கள் ஆகிவிட்டன. எனது மகன் மற்றும் பேரனுக்கு மேலே சகோதரியை போல் கோணிப்பையில்தான் வாழையை காட்டுவேன் என்று நினைக்கிறேன்.

தொழிநுட்பத்தை நாடிச்சென்ற அனைவரும் சற்று சிந்தியுங்கள், நமக்கு நம் பாட்டனை விட அறிவு அதிகம்தான் அதனால் தான் நாம் கணினி முன் அமர்ந்து வேலைசெய்கிறோம். அந்த அறிவையும் தொழிநுட்பத்தையும் எவ்வாறு விவசாயத்துக்கு பயன்படுத்தலாம் என்று சற்று நேரம் ஒதுக்கி யோசித்து பாருங்கள்.

தங்களின் பாட்டன், முப்பாட்டன் இருந்த ஊருக்கு செல்லுங்கள் அங்கு ஏதேனும் உங்களால் விவசாயத்துக்கு உதவமுடியும் என்றால் தாராளமாக செய்யுங்கள். மாடியில் செடி வளர்க்கும் சந்தோசத்தைவிட, இது பன்மடங்கு பெரிது.

எனக்கு நேரம் கிடைக்கையில் என்னால் முடிந்த விவசாயப்பணிகளை செய்துவருகிறேன், விரைவில்  எனது பாட்டன் அப்பன் தொழிலில் முழுமையாக ஈடுபடுவேன்.

Related posts

Leave a Comment